தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை போன்றே மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மை திட்டங்களை திட்டமிடவும், ஒருங்கிணைக்கவும் கண்காணிக்கவும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் மாவட்ட பேரிடர்மேலாண்மை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையானது மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில் பேரிடர் நிகழ்வுக்கு முன்னரும், பேரிடர் நிகழ்வின் போதும், அதற்கு பின்னரும் மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மை சார்ந்த திட்டமிடல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டு முழுவதும் பேரிடர் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், ஆயத்த நிலை ஏற்பாடுகளையும் உறுதிசெய்யும் பொருட்டு அவ்வப்போது கூட்டங்கள் கூட்டப்படுகின்றன.

மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள் வருமாறு:-

 • மாவட்ட ஆட்சியர் - தலைவர் (பதவி வழி)
 • மாவட்ட வருவாய் அலுவலர் - தலைவர் செயல் அலுவலர் (பதவி வழி)
 • மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் - பதவி வழி
 • கூடுதல் ஆட்சியர் / திட்ட அலுவலர், மாவட்ட ஊரக மேலாண்மை முகமை
 • மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)
 • இணை இயக்குநர் (சுகாதாரத்துறை)

மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையானது, மாவட்ட அளவில் பேரிடர் தொடர்பான ஆயத்தநிலை ஏற்பாடுகள் குறித்து சூழ்நிலைகளை கையாள வேண்டி பேரிடர் அல்லாத காலங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து துறை நடவடிக்கைகளையும் ஆண்டு முழுவதும் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளும். எவ்வகையான பேரிடரின் மேலாண்மை தொடர்பான சூழ்நிலைகளை கண்டறிந்து அவற்றை கையாளும் விதங்களை மேம்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான அனைத்து துறைகளின் தலைமை அலுவலர்களுக்கும் உரிய உத்தரவுகள் வழங்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் பிற மாவட்டங்களிலிருந்தோ, முகமையிலிருந்தோ, உதவிகள் பெறவும், நடவடிக்கைகள் மேற்கொண்டு மேற்கெண்ட அனைத்து நடவடிக்கைகளையும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும், மாநில செயலாக்க குழுவிற்கும் தெரியப்படுத்தும்.

மாவட்ட ஆட்சியர் அவர்களின் பங்கும், பொறுப்புகளும் (சென்னை பெருநகர மாநகராட்சியை பொறுத்தமட்டில் அதன் ஆணையர்)

பேரிடர் நிகழ்வின்போது மாநில அரசு சார்ந்த அனைத்து துறைகளும் மற்றும் வாரியங்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதனிமித்தம் சூழ்நிலைகளை கையாள்வதில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலையான பங்கு வருமாறு:-

மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்ற பத்து தினங்களுக்குள் மாவட்ட அளவிலான அனைத்து துறை முக்கிய அலுவலர்களையும் உள்ளடக்கிய முழுஅளவிலான கூட்டத்தை கூட்டி கீழ்க்கண்ட செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

 • மாவட்ட அளவிலான பல்வகை பேரிடர் தாக்கம் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.
 • பேரிடர்களை எதிர்கொள்ளும் பொருட்டு மாவட்ட அளவிலான ஆயத்த ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
 • மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டம் மேம்படுத்துதல் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.
 • மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்துடன் கோட்ட, வட்ட, ஒன்றிய அளவில் நேரிடையாகவோ, தொலை தொடர்பு மூலமாகவோ தகவல் பரிமாற்றத்திற்கான சிறந்த திட்டத்தினை உறுதி செய்தல்.
 • பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சிக்கான அட்டவணை தயாரித்து உறுதிசெய்து அதனை நடைபெறுவதற்கான உரிய நிதியை மாநில அரசிடமிருந்து பெறுதல்
 • மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் ஒருங்கிணைப்புடன் அனைத்து பேரிடர் மீட்பு நடவடிக்கைகளும் நடைபெற உறுதி செய்தல்
 • அனைத்து தொடர்புடையத்துறைகள் மூலமாக சமுதாய தலைவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துதல்
 • மாவட்டத்திலுள்ள அனைத்து துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை / தனியார் துறைகள் ஆகியவற்றில் இருக்கின்ற பேரிடர் மேலாண்மையில் கையாள தேவையான வசதிகளை பெறவும், ஈடுபடுத்த உத்தரவுகள் வழங்குதல்.
 • அரசு சாரா அமைப்புகளின் செயல்பாடுகள் சமமாகவும் பாரபட்சமின்றியும் நடைபெறுவதை உறுதிசெய்தல்.
 • பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் பொறுப்புகளை வரையறுக்கவும் அவர்கள் பணி சூழ்நிலை பாதுகாப்பாக இருக்கவும் உறுதிசெய்தல்.
 • பேரிடர் மேலாண்மைக்கு தொடர்புடைய துறைகளை சார்ந்த வல்லுனர்களையும், ஆலோசகர்களையும் வரவழைத்து தேவையான ஆலோசனைகளை பெற ஏற்பாடுகள் செய்தல்.

பேரிடர் நிகழ்வுகளின் போது அவற்றின் தாக்கம், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், கையிருப்பு மற்றும் தேவையான வசதிகள், நிவாரணப்பொருட்கள் வழங்க தேவையான போக்குவரத்து வசதிகள் போன்றவைப்பற்றிய தகவல்கள் ஒவ்வொரு வாரமும் மாநில வருவாய் நிர்வாக ஆணையருக்கும், மாநில நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்படவேண்டும்.