பேரிடர் அபாய மேலாண்மை

பல்துறை அலுவலர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி

திறன் மேம்பாடு என்பது அனைத்து நிலையிலுள்ள அரசு அதிகாரிகள், சமூக அமைப்புகள், சமூகம் மற்றும் தன்னார்வலர்களின் பேரிடர் மேலாண்மை தொடர்பான அறிவாற்றல், செயல்திறன் மற்றும் மனப்பான்மை போன்ற திறன்களை மேம்படுத்துவதாகும். ஒரு முழுமையான திறன் மேம்பாட்டின் மூலமே மேற்கண்ட இலக்கினை எட்ட முடியும். மேற்கண்ட இலக்கினை எய்தும் வகையில், பேரிடர் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆகிய செயல்களில் ஈடுபடும் பிற துறை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கிட அரசு, அரசாணை நிலை எண். 356, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை (பே. மே- 3 (2)) துறை, நாள்: 16.11.2017-ன் மூலம் ரூ.5.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆப்த மித்ரா- சமூக ஆர்வலர்களுக்கான பயிற்சி திட்டம்

நாடு முழுவதும் வெள்ளத்தினால் மிகக் கடுமையாக பாதிப்பிற்குள்ளாகும் 30 மாவட்டங்களை தேர்வு செய்து, மாவட்டத்திற்கு 200 தன்னார்வலர்கள் வீதம், மொத்தம் 6,000 தன்னார்வலர்களுக்கு மத்திய நிதியிலிருந்து பேரிடர் மீட்பு பயிற்சி வழங்கிட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதில் தமிழகத்தின் சென்னை மாவட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தை செயல்படுத்திட முதல் தவணையாக ரூ.22.70 இலட்சம் தமிழக அரசால் அரசாணை (2டி) எண். 288 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை (பே. மே 1 (2)) நாள்: 11.09.2017 மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 200 தன்னார்வலர்களுக்கு "ஆப்த மித்ரா" திட்டத்தின் கீழ் பேரிடர் மீட்பு குறித்த பயிற்சி வழங்கப்படும்.

இத்தொகை, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு சென்னையிலுள்ள தமிழ்நாடு அதிரடிக் காவல்படை பயிற்சி நிறுவனம் மூலம் 200 தன்னார்வலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.