பேரிடர்களின் போது, அனைத்து துறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, உடனடி மீட்பு நடவடிக்கையின் மூலம் மக்கள் மற்றும் அவர்களது உடைமைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக பேரிடர் நிகழ்வு மீட்பு அமைப்பு (IRS) மாநிலத்தில் கடைபிடிக்கப்படுகிறது.

இவ்வமைப்பானது, பேரிடர் காலங்களில், அரசு, தனியார் துறை மற்றும் அரசு சாரா அமைப்புகள் என அனைத்து நிலைகளிலும் உள்ள அமைப்புகளை ஒருங்கிணைத்து வழி நடத்துகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் நிகழ்வு மீட்பு அமைப்பு (IRS) ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைத்தின் கீழ் செயல்படுகின்றன. தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (NIDM) மூலம் அலுவலர்களுக்கு சம்மந்தப்பட்ட பேரிடர் நிகழ்வு மீட்பு அமைப்பு குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இவ்வமைப்பின் தலைமை பொறுப்பாளராக மாநில தலைமைச் செயலாளரும், இன்சிடன்ட் கமாண்டராக முதன்மை செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையரும் செயல்படுவார்கள். மாநில அளவில் இன்சிடன்ட் கமாண்டருக்கு உதவி புரிய துணை இன்சிடன்ட் கமாண்டராக, ஆணையர், பேரிடர் மேலாண்மை செயல்படுவார். மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்சிடன்ட் கமாண்டராக செயல்படுவார்.