பேரிடர் அபாயத் தகவல் தொடர்பு

பேரிடர் அபாய தகவல் தொடர்பு

பாதிப்பிற்குள்ளாகும் மக்களுக்கு பேரிடர் அபாயம் குறித்த தகவல்களை சரியான நேரத்தில் தெரியப்படுத்தும் ஒரு அமைப்பு முறையினை உருவாக்குவது மிக முக்கிய செயலாகும். இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய தேசிய கடல்சார் தகவல் மையம், மத்திய நீர்வள ஆணையம் போன்ற நிறுவனங்களிலிருந்து பெறப்படும் கனமழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் குறித்த எச்சரிக்கை தகவல்களை மாநில அவசர கட்டுபாட்டு மையத்திலிருந்து மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவற்றின் மூலம் பொது மக்கள், மீட்பு மற்றும் நிவாரணம் போன்ற செயல்களில் ஈடுபடும் முகமைகள் மற்றும் பிற பேரிடர் மேலாண்மை சார்ந்த பங்கேற்பாளர்களுக்கு தெரிவிக்கப்படும். இருப்பினும், இன்சிடன்ட் கமாண்டர் அனைத்து விதமான தகவல் தொடர்பு முறைகளையும் பயன்படுத்தி பொது மக்கள் மற்றும் பிறபங்கேற்பாளர்களுக்கு தகவல்கள் சென்றடைய வழிவகை செய்வார்.

பேரிடர் குறித்த தகவல்களை சேகரிக்கவும் பரிமாறவும் பல்வேறு நவீன நுட்பங்களுடன் கூடிய மாநில அவசர கட்டுபாட்டு மையம் சென்னை வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முகமை அமைந்துள்ள எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 32 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அமைந்துள்ள மாவட்ட அவசர கட்டுபாட்டு மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 14 அவசர கட்டுபாட்டு மையங்கள் மாநிலத்தில் உள்ள மலை சார்ந்த பகுதிகளான உதகமண்டலத்திலும் மற்றும் கடலோர பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 478 VHF மொபைல் நிலையங்கள் தகவல் பரிமாற்ற வசதிக்காக நிறுவப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களையும் இணைத்து மாநில வருவாய்துறை ஆணையர் மற்றும் பேரிடர் மேலாண்மை முகமையுடன் தொடர்பு கொள்ளுவதற்கான காணொளி காட்சி வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை மாநில அவசர கட்டுபாட்டு மையத்துடன் இணைத்து V-SAT தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேரிடர் குறித்த விவரங்களை முகநூல், டிவிட்டர் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் போன்ற மின்னனு அச்சு ஊடகங்கள் மற்றும் மற்ற சமூக ஊடகங்கள் மூலம் பரிமாற்றம் செய்யும் வசதியுள்ளது.