இயற்பியல் சார்ந்த பாதிப்பு

கரையோர பாதிப்பு

13 கடலோர மாவட்டங்கள், 25 கடலோர வட்டங்கள் மற்றும் 561 மீன்பிடி கிராமங்கள் உள்ளன. கடலோர சுற்றுச்சூழல் தற்பொழுது மாசுபாடு, வண்டல்மண் சேருதல் மற்றும் கடலோர அரிப்பு ஆகியவை காரணமாக வெள்ளம், உப்புநீர் ஊடுருவல் மற்றும் புயல் சூழல்களிலிருந்து சிக்கல்களை எதிர்கொள்கிறது. வடக்கே கோரமண்டல கடற்கரையின் புலிக்காட் ஏரியிலிருந்து தெற்கே கோடியக்கரை வரை ஒரே நேர்கோட்டிலும் பின்னர் அதன் நீட்சியாக மன்னார் வளைகுடா மற்றும் இந்திய தீபகற்பத்தின் தென்முனையான கன்னியாகுமாரி வரை நீள்கிறது. 2004 சுனாமி மற்றும் சூறாவளிகள் இப்பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.

கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களும் அதிக கடலரிப்பு பாதிப்பு பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. கடல் அரிப்பினால் ஏற்படும் கடலெல்லை மாற்றம் குறித்த பிரத்யோக வரைபடத்தை தமிழகம் தயாரித்துள்ளது.

உயர்காற்று பாதிப்பு

நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், ராமேஷ்வரம், ராமநாதபுரம் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்கள் உயர்காற்று பாதிப்பு மண்டலங்களாகும், தமிழ்நாடு உயர்காற்று பாதிப்பின் அடிப்படையில் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

  • உயர் ஆபத்து மண்டலம் - 76-117 கி.மீ / மணி
  • உயர் சேத ஆபத்து மண்டலப் பகுதி -63-74 கி.மீ / மணி
  • மிதமான சேத ஆபத்துப்பகுதி -31.39 கி.மீ / மணி

புயல் சலனம் பாதிப்பு

தமிழக கடற்கரையோரங்களில் 3 மீட்டர் முதல் 11 மீட்டர் என புயல் சலன அளவு மாறுபடுகிறது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் தெற்கு பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்திலான புயல் எழுச்சியை சந்தித்துள்ளது. தஞ்சாவூர், கடலூர் மற்றும் சென்னையின் வடக்கு பகுதிகள் கடல்மட்டத்திலிருந்து 3 மீட்டர் உயரத்திலான புயல் எழுச்சி ஏற்படும் பகுதிகளாக உள்ளன.

நில அதிர்வு பாதிப்பு

தீபகற்ப இந்தியாவில் நில அதிர்வு பாதிப்புக்குள்ளாகக் கூடிய 13 இடங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். இது கிழக்கிலிருந்து மேற்க்காக காவிரிப்பிளவு, திருக்கோவிலூர் - பாண்டிச்சேரி பிளவு, வைகை நதி பிளவு, வடத்தெற்காக செல்லும், குமரி - கோடியக்கரை பிளவு மற்றும் இராஜபட்டினம் மற்றும் தேவிப்பட்டினம் பிளவு பகுதிகள் நகர மயமான கோயம்புத்தூர், மதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், பாண்டிச்சேரி ஆகிய ஊர்களுக்கு நெருக்கமாக அமைந்துள்ளன. 200 ஆண்டுகால தகவல்களின் அடிப்படையில் பார்க்கையில் தமிழகம் மிதமான நில அதிர்வுகளை எதிர்கொண்டுள்ளது. இதுவரை m >5.0 க்கும் குறைவான 12 நில அதிர்வுகள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளன.

Seismic Zoning Map of Bureau of India-வால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைபடத்தின் படி தமிழகத்தின் 73ரூ பரப்பு மண்டலம்-II, 27ரூ பரப்பு மண்டலம் III-லும் வருகிறது. மண்டலம்-II என்பது H.9-க்கும் குறைவானது. மண்டலம் III என்பது 6.9 வரையானது. தமிழகத்தின் கோயமுத்தூர், தர்மபுரி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமாரி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் மண்டலம் II-ன் கீழ் வருபவை. மாநில தலைநகரமான சென்னை மற்றும் முக்கிய மாவட்டங்களான கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலம்III-ன் கீழ் வருகின்றன.

ஆழிப்பேரலைப் பாதிப்பு

2004-ல் டிசம்பரில் தமிழக கடலோரப் பகுதியை தாக்கிய ஆழிப்பேரலை பெரிய அளவில் பொருட்சேதத்தையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தியது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் சேதாரம் குறித்த விபரங்கள் கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

சுனாமியின் தாக்கம் குறித்த விபரம் மாவட்டங்கள் வாரியாக:

வ. எண். மாவட்டம் மனித இழப்பு கால்நடை இழப்பு காயமடைந்தோர் எண்ணிக்கை
1. சென்னை 206 2 16
2. கடலூர் 610 949 259
3. காஞ்சிபுரம் 130 4 27
4. கன்னியாகுமரி 799 1187 754
5. நாகப்பட்டினம் 6065 12821 2367
6. புதுக்கோட்டை 15 0 0
7. இராமநாதபுரம் 20 0 2
8. தஞ்சாவூர் 37 0 20
9. திருவள்ளூர் 29 220 0
10. திருவாரூர் 29 0 3
11. திருநெல்வேலி 4 899 6
12. தூத்துக்குடி 3 0 0
13. தவிழுப்புரம் 48 0 46
  மொத்தம் 7995 16082 3500

வெப்ப அலை பாதிப்பு

வெப்ப அலை என்பது கோடை காலத்தில் இயல்பை விட வெப்பநிலை உயர்வதால் ஏற்படும் நிகழ்வாகும் குறிப்பாக வெப்ப அலை வெயில் காலங்களில் என்பது மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கிடையே ஏற்படுகிறது.

இம்மாதிரியான அதிகப்படியான வெப்ப நிலையும், அதன் விளைவாக ஏற்படும் வளி மண்டல மாறுபாடும், அப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதிப்படையச் செய்வதோடு உடலில் உபாதைகளை ஏற்படுத்துகிறது. சமயங்களில் மரணங்களும் ஏற்படுகின்றது.

தமிழகத்தில் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோயமுத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை போன்றவை வெப்ப அலைகளின் தாக்கத்தால் பாதிக்கப்படும் மாவட்டங்களாகும்.