வெப்ப அலை

வெப்ப அலை என்பது இயல்பு வெப்ப நிலையை விட கூடுதலாக 3oC வெப்ப உயர்வு தொடர்ச்சியாக 3 தினங்கள் அல்லது அதற்கு மேல் தொடர்வதை குறிக்கும்.

உலக வானிலை ஆய்வு அமைப்பானது தொடர்ச்சியாக 5 தினங்கள் அல்லது அதற்கு மேல் இயல்பு வெப்பநிலையை விட 5oC அதிகமாகும் போது வெப்ப அலை ஏற்படும் என வரையறை செய்துள்ளது.

வெப்ப அலை பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வெப்ப அலை தாக்கத்தால் உயிரிழப்புகள் நேராத வண்ணம் தடுக்கும் பொருட்டு உரிய காலத்திற்குள் முன்னறிவிப்பு / எச்சரிக்கை செய்ய வெப்ப அலை முன்னறிவிப்பு கருவிகள் வடிவமைக்கப்பட்டு நடப்பில் உள்ளன. சமவெளிகளில் 40oC அளவிற்கும் மலைப் பிரதேசங்களில் 30oC அளவிற்கும் வெப்பலை உயர்வு ஏற்படும் பொழுதும் வெப்ப அலை தாக்க எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை 5 தினங்களுக்கு ஒரு முறை வெப்ப அலை தாக்கம் குறித்த முன்கணிப்பு தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது.

தமிழகமானது இந்திய தீபகற்பத்தின் பேரிடர் பாதிப்புகளுக்குள்ளாகும் பகுதிக்குள் அமைந்துள்ளது. இங்கு வானிலை மற்றும் புவியியல் சார்ந்த பேரிடர்களான சூறாவளி, வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி மற்றும் வறட்சி போன்றவை அடிக்கடி ஏற்பட்டு வருகின்றது. சமீபகாலமாக வெப்பநிலையில் ஏற்படும் உயர்வால் கோடை மற்றும் பருவமழைக்கு முந்தைய மாதங்களில் வெப்ப அலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வரையறுக்கப்பட்டபடி வெப்ப அலை மற்றும் கடும் வெப்ப அலை ஏற்படுவதற்கான அடிப்படை

சமவெளிகளில் 40oC அல்லது அதற்கு மேலாகவும், மலைப் பிரதேசங்களில் 30oC அல்லது அதற்கு மேலாகவும், கடலோர பகுதிகளில் 37oC அல்லது அதற்கு மேலாகவும் வெப்பநிலை உயரும் போது வெப்பஅலை நிகழ்வு ஏற்பட்டதாக கருதப்படும்.

அதிகம் பாதிப்படையும் மக்கள் பிரிவினர்:-

 • குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள்
 • கட்டுமான பணி / வெளிப்புற பணி / விவசாய பணி / மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்ற பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்கள்.
 • காவலர்கள் / தனியார் பாதுகாவலர்கள்
 • அதிக வெப்ப நிலை கொண்ட சூழலில் பணிபுரியும் தொழிற்சாலை பணியாளர்கள்
 • பாதையோர வியாபாரிகள் / விற்பனை பணியாளர்கள்
 • ரிக்ஷா ஓட்டுநர்கள் / ஆட்டோ ஓட்டுநர்கள் / பேருந்து ஓட்டுநர்கள் / சுற்றுலா வண்டி ஓட்டுநர்கள்
 • கூலித்தொழிலாளர்கள் / குடிசை வாசிகள் / பிச்சைக்காரர்கள் / வீடில்லா நாடோடிகள்
 • நாட்பட்ட வியாதியஸ்தர்கள்
 • போதை மீட்பு சிகிச்சை பெறுபவர்கள்
 • சாராயம் மற்றும் போதை மருந்துக்கு அடிமையானவர்கள்

ஆயத்த நடவடிக்கைகள்

 • பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வசதி அளிப்பதை உறுதி செய்தல்.
 • வெப்ப அலை அபாய எச்சரிக்கை காலங்களில் மக்களுக்கு தேவையான அளவு நிழற்குடை மற்றும் குடிநீர் வசதி கிடைப்பதை உறுதி செய்ய ஏதுவாக பேருந்து பணிமனை / நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், பயணியர் தங்குமிடங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பொது இடங்களை உள்ளாட்சி நிர்வாகங்கள் இனம் கண்டறிய வேண்டும்.
 • மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையம் போன்ற இடங்களில் மின்சார வசதி தடையின்றி வழங்கப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தல் வேண்டும்.
 • மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையம் போன்ற இடங்களில் ஐஏ திரவங்கள், குளிர்சாதன வசதிகள் அல்லது உரை மணி கட்டி, உப்பு-சர்க்கரை கரைசல் திரவம் ஆகியவை இருப்பு வைத்தல் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை போன்றவற்றில் தேவையான அளவு இருப்பு வைத்திருப்பதை தயார் நிலையில் இருத்தல்.
 • வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்படும் நபர்களுக்கு அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க தேவையான வசதிகளை செய்துத் தருதல்.
 • வெப்ப அலை தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளம்பரப் பலகைகள் வைத்தல்.
 • 108 மற்றும் 104 அவசரக்கால தேவை வசதிகளில் தேவையான அளவு ஐஏ திரவங்கள் இருப்பு வைத்திருப்பதை அவ்வப்போது சரிப்பார்த்தல்.
 • பேருந்து பணிமனை / நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், பயணியர் தங்குமிடங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பொது இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அமைத்தல்.
 • பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் பூங்காக்களை நீண்ட நேரம் திறந்து வைத்திருத்தல்.
 • பணியாளர் சட்டங்களின் படி பணிச்சூழலில் தேவையான அளவு தங்குமிடம் பாதுகாப்பான குடிநீர் மற்றும் குளியலறை வசதி போன்றவற்றை பணியாளர்களுக்கு அளிக்க தொழிலாளர் நலத்துறை சார்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 • அவசரக் காலங்களை எதிர்கொள்ளும் விதமாக எந்நேரமும் தேவையான உபகரணங்களுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் தயாராக இருத்தல் வேண்டும்.
 • திறந்த வெளிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு வெப்ப அலை தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போதுமான பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
 • போக்குவரத்து காவலர்களுக்கு தேவையான அளவு நிழல் தரக்கூடிய தங்குமிடங்களை அமைத்து தர வேண்டும்.
 • அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் சூரிய ஒளியில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட வேண்டும்.
 • கோடைக்காலங்களில் பேரிடர் தணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் நடைபெறும் பகுதிகள் குறித்த தகவல்களை சேகரித்தல்.
 • மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட விதிகளில் தெரிவித்துள்ள படி இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு வெப்ப அலை தாக்கக் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த பயிற்சி வழங்கப்பட வேண்டும் மேலும் அவர்களுக்கு தேவையான அளவு தங்குமிடம் பாதுகாப்பான குடிநீர் ஆகியவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். மேலும், இப்பணியாளர்களின் குழந்தைகளுக்கும் சூரிய ஒளியில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட வேண்டும்.

கால்நடைகள் தொடர்பான நடவடிக்கைகள்

விலங்குகள் பாதுகாப்பு
 • கோழிகள் மற்றும் கால்நடைகள் வெப்ப அலை தாக்கத்தால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவை என்பதால் அவற்றினை முறையாக பாதுகாக்க பண்ணை உரிமையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு தரப்பட வேண்டும்.
 • கால்நடை மருத்துவமனைகளில் கோழிகள் மற்றும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அளவு மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும்.
 • மேலும், கால்நடை மருத்துவமனைகளில் தேவையான அளவு குடிநீர் வசதி செய்து தரப்பட்டிருக்க வேண்டும்.
காட்டு விலங்குகள்

பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதி மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் வசிக்கும் காட்டு விலங்குகளுக்கு தேவையான அளவு குடிநீர் வசதி செய்து தரப்பட்டிருக்க வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகள்
 • வெப்ப அலை தாக்கக் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.
 • உள்ளூர் வானொலி, திரையரங்குகள், அச்சிடப்பட்ட விளம்பரத்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் கோடைக்காலங்களில் ஏற்படும் வெப்ப உயர்வு குறித்த முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.
 • உள்ளாட்சி அமைப்புகள் வெப்ப அலை தாக்கக்கம் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும்.
 • கோடைக்காலங்களில் காட்டுத் தீ ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதால் அந்த நேரங்களில் உரிய முன் அனுமதி இன்றி காட்டுக்குள் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட வேண்டும்.
திறன் வளர்ப்பு / பயிற்சி நடவடிக்கைள்
 • வெப்பத்தாக்கத்தால் ஏற்படக் கூடிய உடல் நலக்குறைவுகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவப் பணியாளர்களுக்கு ஒருமுகப்பயிற்சி சுகாதாரத்துறையால் வழங்கப்பட வேண்டும்.
 • பள்ளிகளில் மாணவர்களுக்கு வெப்பத்தாக்கம் குறித்த முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வழங்க ஏதுவாக உரிய பயிற்சியினை ஆசிரியர்களுக்கு அளிக்க வேண்டும்.
அரசு மற்றும் அரசுசாரா அமைப்புகளின் ஈடுபாடு

சிறப்பாக செயல்படக் கூடிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் / ரோட்டரி சங்கம் / அரிமா சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களில் உதவியுடன் கோடைக்காலங்களில் நிழற் கூடங்கள் மறும் தண்ணீர் பந்தல் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வெப்பத்தாக்கத்தின் போது செய்ய வேண்டியவை
 • வெப்பத்தாக்கம் குறித்து தகவல்களை தெரிந்துக் கொள்ள அவ்வப்பொழுது வானொலி, தொலைக்காட்சி மற்றும் தினசரி செய்திகளை காணவும்.
 • தாகம் இல்லாவிடினும் அவ்வப்பொழுது குடிநீர் அருந்தவும்.
 • லேசான, தளர்வான மற்றும் வெளிர்நிற பருத்தி ஆடைகளை அணியவும்.
 • வெளியில் செல்லும் போது வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கண்ணாடி, குடை, தொப்பி, காலணி ஆகியவற்றை பயன்படுத்தவும்.
 • வெளியில் செல்லும் போது தண்ணீர் பாட்டில்களை உடன் கொண்டு செல்லவும்.
 • வெளிப்புற சூழலில் பணிபுரிபவராக இருப்பின் தொப்பி மற்றும் குடை பயன்படுத்தவும். மேலும், ஈரமான துணியைப் பயன்படுத்தி தலை, கழுத்து, மூட்டு மற்றும் முகம் போன்ற பகுதிகளை மூடி வைக்கவும்.
 • கோடைக்காலங்களில் உடலில் ஏற்படக் கூடிய நீர்ச்சத்து இழப்பை தடுக்கும் வண்ணம் உப்பு-சர்க்கரை கரைசல், இளநீர், வீட்டுமுறைப் பானங்களான லஸ்ஸி, அரிசி கஞ்சி, எலுமிச்சை சாறு, மோர் போன்ற பானங்களை பருகவும்.
 • வெப்பத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளான வெப்பத்தாக்கம், கட்டி, தசைப்பிடிப்பு போன்றவற்றை உடன் கண்டறிந்து தேவையான முதலுதவி சிகிச்சை பெறல். தேவைப்படின் மருத்துவரின் உதவியை கோருதல்.
 • சிறுநீர் மஞ்சள் நிறமாகவோ, வெளிர் மஞ்சர் நிறமாகவோ கழிப்பது என்பது உடலில் நீர் சத்து குறைவதை குறிக்கும். எனவே, தேவையான முதலுதவி சிகிச்சை பெறுதல் அவசியம்.
 • விலங்குகளை நிழல் தரும் கூடங்களில் தங்கவும், தேவையான அளவு குடிநீர் வசதியும் செய்து தர வேண்டும்.
 • வீடுகளை குளுமையாக வைத்துக் கொள்ள ஏதுவாக ஜன்னல், விதானங்கள் ஆகியவற்றை இரவு நேரங்களில் திறந்து வைத்தல் அவசியம்.
 • உடலைக் குளுமையாக வைத்துக்கொள்ள மின்விசிறி, ஈரமான துணி பயன்படுத்துதல், குளிர்ச்சியான நீரைப் பயன்படுத்தி குளியல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
 • பணிபுரியும் இடங்களில் பருக குளிர்ந்த நீரை பயன்படுத்தவும்.
 • பகல் நேரங்களில் சூரிய ஒளி நேரடியாக படும் வண்ணம் பணிகள் மேற்கொள்ளுவதை தவிர்க்க பணியாளர்களுக்கு அறிவுறுத்தவும்.
 • கடுமையான பணிகளை மாலை / இரவு நேரங்களில் மேற்கொள்ளவும்.
 • வெளிப்புற சூழலில் பணிபுரியும் பொழுது அடிக்கடி ஓய்வு எடுக்கவும், ஓய்வு நேரத்தை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்கவும். கர்ப்பிணி பணியாளர்கள் மற்றும் உடல்நலக் குறைவுற்ற பணியாளர்கள் மீது தனிக்கவனம் செலுத்தவும்.
வெப்பத்தாக்கத்தின் போது செய்யக் கூடாதவை
 • நிறுத்தம் செய்யப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை தனியாக விட்டுச் செல்ல வேண்டாம்.
 • பகல் நேரங்களில் குறிப்பாக பிற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்.
 • பகல் நேரங்களில் குறிப்பாக பிற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கடுமையான பணிகள் செய்வதை தவிர்க்கவும்.
 • வெயில் அதிகமாக உள்ள நேரங்களில் உணவு சமைப்பதை தவிர்க்கவும். மேலும், சமையல் செய்யும் பொழுது காற்றோட்டம் நன்கு அமையும் வண்ணம் கதவுகளை திறந்து வைக்கவும்.
 • தேநீர், காபி மற்றும் கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள் அருந்துவதால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் என்பதால் மேற்படி பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்.
 • புரதச்சத்துள்ள மற்றும் நொறுக்குத் தீணிகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
அவசரக்கால சிகிச்சை முறைகள்

வெப்பத்தாக்கத்தால் பாதிக்கப்படின் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வசதிக்கு அழைக்கவும். மேலும், உதவி வரும் வரை பின்வரும் முதலுதவி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

 • பாதிக்கப்பட்டவரை சமமான இடத்தில் தரையில் படுக்க வைக்கவும்.
 • அவரது உடல் வெப்ப நிலையை பரிசோதித்து, முடியும் பட்சத்தில் நிழலான / குளிர்ச்சியான இடத்திற்கு கொண்டு செல்லவும்.
 • குளிர்ச்சியான பொருட்களை அவர் மீது படும்படி வைத்து ஒத்தடம் தரவும். இதன் மூலம் அவரது உடல் வெப்ப நிலையை குறைக்க இயலும்.
 • குளிர்ச்சியான நீரை அவர் மீது தெளித்தும், ஈரமான துணியால் சுற்றியும், மின்விசிறியின் கீழ் அவரை கிடத்தியும் அவரது உடல் வெப்ப நிலையை குறைக்க இயலும்.
 • மயக்கம் தெளியும் பட்சத்தில் திரவ உணவுகளை வழங்கலாம்.
 • தயவு செய்து ஆஸ்பிரின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்க வேண்டாம்.