பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் தொடர்பான ஒருங்கிணைப்பு அமைப்புகள்

1. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பேரிடர் மேலாண்மை தொடர்பான கொள்கைகளை ஏற்படுத்துவதற்கும், திட்டங்கள் தீட்டுவதற்கும், வழிமுறைகள் தெரிவிப்பதற்கும் இந்திய அரசு மட்டத்தில் தலையாய அமைப்பாகும். இவ்வாறு தெரிவிக்கப்படும் பேரிடர் மேலாண்மைத் துறை வழிமுறைகள் மைய அமைச்சகங்களின் துறைகளுக்கும், மாநில அரசுக்கும் அவர்களின் திட்டங்களை வகுக்க பெரிதும் உதவுகிறது. மேலும், இவ்வாணையம் தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் சார்ந்த துறைகளின் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்து வருகிறது. இவ்வாணையம் மேலும் பேரிடர் தணிப்பு நடவடிக்கைகளுக்கும், ஆயத்த நிலை ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கப்படுவதை கண்காணிக்கிறது, மேலும் அயல் நாடுகளில் ஏற்படும் பேரிடர் நிகழ்வின் போது தேசிய அளவில் தேவையான உதவிகளை முடிவெடுத்து வழங்கிவருகிறது.

2. இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை

இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை வானிலை, பருவகாலமாற்றங்கள், பருவ நிலை தொடர்பான எச்சரிக்கைகள் தொடர்பான செய்தி அறிக்கைகளை பேரிடர் மேலாண்மை அலுவலர்களுக்கு ஆயத்த நிலை ஏற்பாடுகள் மேற்கொள்ளும் பொருட்டு வெளியிட்டு வருகின்றது. இந்த துறையானது பருவ மாற்றங்களை கண்டறிந்து, முன் அறிவிப்புகளையும் தெரிவித்து வருகின்றது. புயல் மற்றும் வெள்ளக் காலங்களில் மாநில அரசு மண்டல வானிலை ஆராய்ச்சி மையத்துடன் முன்னறிவிப்புகள் குறித்து நெருங்கிய தொடர்பு கொண்டு வருகிறது. ரிக்டர் அளவு 3.0-க்கு மேல் ஏற்படும் நில அதிர்வு பற்றியுமான முன்னெச்சரிக்கை அறிக்கைகள் இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை மாநில அரசுக்கு உடனுக்குடன் தெரிவித்து வருகிறது.

3. இந்திய தேசிய கடல்சார் தகவல்கள் மையம்

இந்திய தேசிய கடல்சார் தகவல்கள் மையம், இந்திய அரசின் புவியியல் துறையை சார்ந்த தேசிய அமைப்பாகும். இம்மையமானது கடற்கரை மற்றும் கடல் சார்ந்த தகவல்களை மீன்பித்தொழில், கப்பல் போக்குவரத்து, பருவ நிலை, சூற்றுச்சூழல் கடற்கரை மற்றும் ஆழ்கடல் நடவடிக்கைகள் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவிடும் வகையில் தகவல்கள் தெரிவிப்பதோடு முற்போக்கான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் காற்றின் வேகம், அலைகள், கடல்நீரோட்டம், கடல் மேல்மட்ட காற்றழுத்த வேறுபாடு, கடல் மேல்மட்ட வெப்பநிலை மற்றும் பவழப்பாறைகள் படிவுகள், அலையாத்தி காடுகள், கடற்கரை மாற்ற நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் பரிமாற்றத்திற்கு வழிவகை செய்கிறது. இம்மையம் ஏற்கனவே நில அதிர்வினால் ஏற்பட வாய்புள்ள சுனாமி குறித்து முன்னெச்சரிக்கைகளையும் வழங்கி வருகின்றது.

4. தேசிய பேரிடர் உணர்வு மையம்

தொலை உணர்வு மற்றும் விண்வெளி தகவல்களை பகுதிகள் சார்ந்த மற்றும் பகுதிகள் சாரா படங்களாக தெரிவிக்கும் பணியின் செயலாக்க மையமாக இந்திய அரசின் விண்வெளித்துறையை சார்ந்த தேசிய தொலை உணர்வு மையம் இருந்து வருகிறது. இம்மையத்திலிருந்து பெயரிடப்படும் தொலை உணர்வு தகவல்கள் மற்றும் படங்கள், இயற்கை வளங்களை நிர்வகிப்பதிலும், பேரிடர் மேலாண்மையிலும், வெள்ள மேலாண்மையிலும் முக்கியபங்கு வகிக்கின்றன. அண்மையில் தேசிய தொலை உணர்வு மையம் கிராம அளவில் பேரிடர் மேலாண்மை செய்ய கைப்பேசி செயலி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

5. கட்டிட கட்டுமான பொருட்கள் மற்றும் கட்டுமான தொழில்நுட்ப குழு

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு துறையைச் சார்ந்த கட்டிட கட்டுமான பொருட்கள் மற்றும் கட்டுமான தொழில்நுட்பகுழு பேரிடர் பாதிப்புகள். ஏற்படாத வகையில் பொருத்தமான கட்டுமான பொருட்கள் குறித்தும் தொழில்நுட்பம் குறித்தும் எளிய வழிமுறைகளை குடிமக்களுக்கு அளித்து வருகின்றது.

6. இந்திய தரக்கட்டுபாடு குழுமம்

நில அதிர்வுகளை தாங்கும் வகையிலான கட்டுமான தரங்களை அந்த நில அதிர்வு தாக்கத்திற்கான பகுதிகளுக்கு உகந்த கட்டுமான வழிமுறைகள் என்று இக்குழுமம் வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் கட்டுமான விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு நகர் மற்றும் ஊரக திட்டமிடல் இயக்குனரகங்கள் மூலமாக பின்பற்றப்படுகின்றன.

7. இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை

சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் உயர் தொழில்நுட்பக் கல்வி மற்றும் செயலாக்க ஆராய்ச்சி துறையில் தேசிய அளவில் ஒரு முன்னோடி நிலையமாக உள்ளது. இந்நிலையம் பதினாறு கல்வி துறைகளுடன் சில செயல்முறை சார்ந்த முன்னோடி ஆராய்ச்சி மையங்களுடனும், பொது அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளின் நூறு ஆய்வகங்களுடனும் இயங்கி வருகிறது.

8. அண்ணா பல்கலைக்கழகம்

வேளாண்மை, நில பயன்பாடு, தரிசு நில மேம்பாடு, வனவளம், பேரிடர் அபாயம் தணிப்பு பருவ நிலை மாற்றம், கடல் சார் நிகழ்வு கண்காணிப்பு ஆகியவைகளுக்கு தொலை உணர்வு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி சம்மந்தமான புவிசார் தொழில் நுட்பங்களை வழங்க வருகிறது.

9. தேசிய கடல் ஆராய்ச்சி நிலையம்

இந்நிலையம் கடற்கரை மற்றும் கடல்சார் நிகழ்வுகள் குறித்த ஆராய்ச்சி மேற்கொண்டு தகவல்கள் வழங்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது.

10. அரசுமுறை சாரா அமைப்புகள்

பேரிடர் காலங்களில், அரசு சாரா அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வமைப்புகளுக்கு சமுதாயத்தினுடன் நெருங்கிய வகிக்கிறது. இவ்வமைப்புகளுக்கு சமுதாயத்தினுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதினால் அவசரகாலங்களில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பதினால் திறமையாகவும், கடினமாகவும் பங்காற்றவல்ல அரசு சாரா அமைப்புகளை பேரிடர் மேலாண்மையின் போது ஈடுபடுத்துவது நல்லதாகும். அரசு முறை சாரா அமைப்புகள் பேரிடர் ஆபத்து தணிப்பு நடவடிக்கைகளில் சமுதாயத்தினை திரட்டி ஈடுபடுத்துவதில் கீழ்க்கண்ட வகையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

  • சமுதாயத்தின் அடிமட்ட மக்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ள அரசு சாரா அமைப்புகளினால் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், ஆயத்தநிலை ஏற்படுத்துவதிலும், ஆபத்து தணிப்பு திறனிலும், பொறுப்பான அமைப்பினருடன் எதிர்ப்பு உத்திகளை மேம்படுத்துவதிலும் திறன்பட செயல்பட வாய்ப்புள்ளது.
  • பருவகால மாற்றங்களை எதிர்நோக்கி அயல்நாடுகளில் செயல்படுத்தப்படும் புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்த முடிகிறது.
  • அவ்வாறான புதிய அணுகுமுறைகளை செயல்படுத்த பலவகையான நன்கொடையாளர்களிடமிருந்து நிதி உதவி பெற முடிகிறது. இதன் மூலம் வெவ்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து பேரிடர்களினால் பாதிப்புள்ளாகும் சமுதாயங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வழிவகை செய்ய முடிகிறது.

11. மாநில அவசரகால கட்டுபாட்டு மையம்

மாநில அளவில் ஒரு அவசரகால கட்டுப்பாட்டுமையம் ‘மாநில நிர்வாக ஆணையர் / மற்றும் மாநில நிவாரண ஆணையர் நேரடி மேற்பார்வையில் கீழ் ஆண்டு முழுவதும்’ 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இம்மையம் ஒரு தகவல் மையமாக செயல்பட்டு வருகிறது. இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை, மத்திய நிர்வாக ஆணையம், இந்திய தேசிய கடல்சார் தகவல் மையம் மற்றும் இதர அமைப்புகளிலிருந்து பெறப்படும் முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையங்களுக்கும், ஊடகங்களுக்கும் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் தெரிவிக்கப்படுகின்றன. இம்மையமானது பேரிடர் காலங்களில் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் 24 நேரமும் இயங்கி முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் விரைவாக பரிமாற்றம் செய்கிறது. பாதிப்புக்குள்ளாகும் மக்களிடம் 1070 என்ற எண்ணிலுள்ள கட்டணமில்லா தொலைபேசி மூலம் அவசரகால தகவல்கள் பெறப்பட்டு பொறுப்பான அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பபடுகிறது. மேலும் மழையளவு, வெள்ள அபாயம், வறட்சி, நில அதிர்வு சம்மந்தமான தகவல்கள் அளிக்கும் அமைப்புகளிலிருந்து பெறப்படும் முன்னறிவிப்புகள் மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்மந்தபட்ட அரசுத்துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தெரிவிக்கப்படுகிறது.