கடலோர பேரிடர் அபாயக் குறைப்பு திட்டம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 15.05.2013 அன்று சட்டமன்ற பேரவையில் கடலோர பேரிடர் அபாயம் குறைப்பு திட்டம் (Coastal Disaster Risk Reduction Project) என்ற புதிய திட்டம் உலக வங்கியின் உதவியுடன் ரூ.1481.80 கோடி செலவில் அமுல்படுத்தப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு மேற்படி திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. 13 கடலோர மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆணையர், பேரிடர் மேலாண்மை இத்திட்டத்தின் திட்ட இயக்குநராகவும், வருவாய் நிருவாக ஆணையர் / மாநில நிவாரண ஆணையர் இத்திட்டத்திற்கான திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகின்றனர். இத்திட்டத்தின் கூறுகள் பின்வருமாறு:-

வ.எண் விவரிப்பு நிதி ஒதுக்கீடு (ரூ. கோடியில்)
I. பேரிடர் அபாயம் குறைப்பு நடவடிக்கைகள் 1035.00
II. நீடித்த மீன்வளத்துறை பணிகள் 321.30
III. நபேரிடர் அபாய குறைப்பிற்கான திறன் வளர்ப்புப் பணிகள் 52.50
IV. திட்ட செயல்பாட்டிற்கான தொகை 73.00
  மொத்தம் ரூ. 1481.80

கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான பேரிடர் அபாய குறைப்பு நடவடிக்கைகள் பாதுகாப்பான வீடுகள் கட்டுதல் மற்றும் பாதுகாப்பான சாலைகள் அமைத்தல் (ரூ. 310 கோடி)

கடலோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு விதமான பேரிடர் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு வழங்கும் வகையில் 488 கடலோர கிராமங்களில் பேரிடரை தாங்கக்கூடிய 14,347 வீடுகள் கட்டி அதற்குரிய காப்பீட்டு சான்றிதழுடன் (10 வருடத்திற்கான காப்பீடு) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பேரிடர் காலங்களில் கடற்கரை கிராமங்களில் வசிக்கும் மக்கள் பல்நோக்கு பாதுகாப்பு மையத்திற்கு எளிதில் சென்றடைய உதவும் வகையில் 143 இடங்களில் அறிவிப்பு பலகைகளுடன் கூடிய முறையான இணைப்பு சாலைகள் அமைத்து மக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் கட்டுதல்: (ரூ. 345.60 கோடி)

கடலோரத்தில் பாதுகாப்பற்ற வசிப்பிடங்களில் வாழ்ந்துவரும் மக்களை புயல் மற்றும் இதர வகை பேரிடர் காலங்களில் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்காக 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் கட்டப்பட்டு வருகிறது. மேற்படி மையங்கள் பேரிடர் அல்லாத காலங்களில் பள்ளிகளாகவும், சமுதாய கூடமாகவும், ஆரம்ப சுகாதார மையங்களின் வரவேற்பு கூடமாகவும் பயன்படுத்தப்படும் வகையில் கட்டப்பட்டுள்ளது.புயல், வெள்ளம் போன்ற அவசர காலங்களில் பாதுகாப்பு மையங்களாகவும் செயல்படும்.

முன்னெச்சரிக்கை கருவிகள் அமைத்தல்: (ரூ.50 கோடி)

பேரிடர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்து பொதுமக்களுக்கு விரைவாக தகவல்கள் வழங்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை கருவி (EWS) அல்லது பேரிடர் குறித்த அறிவிப்பு கருவி (DWAS) ஒன்றினை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடற்கரையில் வாழும் சமூகத்தினருக்கு பேரிடர் குறித்த செய்திகளை முன்னெச்சரிக்கை செய்வதற்கு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை கடற்கரை வாழ் சமுதாயத்தினருடன் ஒருங்கிணைக்க சமுதாய அடிப்படையிலான பேரிடர் மேலாண்மை திட்டம் (CBDRM) மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முன்னெச்சரிக்கை அமைப்பானது ரூ. 50 கோடி செலவில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமையின், திட்ட மேலாண்மை அலகு மூலம் செயலாக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினை செயல்படுத்துவதற்கு திட்ட மேலாளராக எல்காட்நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உபகரணங்களை வாங்கி அவற்றை நிறுவும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

நாகபட்டினம், கடலூர் மற்றும் வேளாங்கண்ணி நகராட்சிகளில் தரைக்கு மேல் உள்ள மின் இணைப்புகளை பூமிக்கு அடியில் நிறுவுதல் (ரூ.360 கோடி)

2011 ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட தானே புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெரிய அளவில் மின் உள்கட்டமைப்புக்கள் பாதிப்புக்குள்ளாயின. எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மற்றும் கடலூர் நகராட்சிகளில் ஒரு முன்னோடி முயற்சியாக பூமிக்கு மேலுள்ள மின் இணைப்புக்களை பூமிக்கு கீழான இணைப்புகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியானது ரூ.360 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

நீடித்த மீன்வளம் (ரூ.321.30 கோடி)

தமிழ்நாட்டில் 2004-ஆம் ஆண்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவ மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்க தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பிரிவின் கீழ் இரண்டு வகை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அவை:-

  • உள் கட்டமைப்புகளை மேம்படுத்துதல்
  • நிலைத்த வாழ்வாதாரத்திற்கான மீன்வள மேலாண்மை (FIMSUL-II)

ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கான தொலைத்தொடர்பு வசதிகள்

கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் உத்தரவாதத்தினை உறுதிபடுத்தும் வகையில் கம்பியில்லா தொலைதொடர்பு வசதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் ரூ. 62.14 கோடி செலவில் கடற்கரை பகுதிகளில் செயல்படும் மீன்பிடி கப்பல்களுக்கு இடையூறில்லாத தொலைதொடர்பு வசதிகளை வழங்கும் பணியில் 17,539 உபகரணங்கள் GPS ரிசீவர்கள் பொருத்தப்பட்ட 15,004 எண்ணிக்கையிலான 5 வாட் திறன் கொண்ட VHF கடல்சார் கையடக்க வானொலிகள் மற்றும் GPS ரிசீவர்கள் பொருத்தப்பட்ட 2535 எண்ணிக்கையிலான 25 வாட் திறன் கொண்ட நிலையாக பொருத்தப்பட்ட VHF கடல்சார் வானொலிகள் வாங்கப்பட்டு மீனவர்களுக்கு அளிக்கப்பட்டடுள்ளது. Wireless Planning& Co-ordination மூலம் உரிமம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 100 மீட்டர் VHF கோபுரங்கள் நிறுவும் பணி பாரத தொலைத் தொடர்பு நிறுவனம் (BSNL) மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிலைத்த வாழ்வாதாரத்திற்கான மீன்வள மேலாண்மை (FIMSUL-II)

நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான மீன்வள மேலாண்மை செயல்படத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மீனவர்களுக்கு நிலைத்த வாழ்வாதாரத்திற்கான பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பேரிடர் அபாய மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாடு

பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடையே உருவாக்குவதற்காக 7 முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி வகுப்பு பாடத்திட்டங்களில் பேரிடர் மேலாண்மை குறித்து பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிக்காக ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மை திட்டம் (ரூ.15.00 கோடி)

இத்திட்டமானது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் (SIRD) உதவியுடன் ரூ.15 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 4977 குழுக்கள் அடங்கிய 289331 நபர்களுக்கு பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடர் பற்றிய விழிப்புணர்வு, நீச்சல், முதலுதவி, ஒத்திகைப் பயிற்சி, வீதி நாடகங்கள், பாதுகாப்பு மைய மேலாண்மை போன்ற பலவகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட கடற்கரை மண்டலங்களின் மேலாண்மை திட்டம் (ரூ.7.50 கோடி)

இயற்கை வளங்களை பாதுகாக்கவும் மற்றும் பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் ஒருங்கிணைக்கப்பட்ட கடற்கரை பகுதிகளில் மேலாண்மை திட்டம் (ICZMP) செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட கடற்கரை பகுதிகள் குறித்த மேலாண்மை திட்டம் (ICZMP) தயாரித்தல், பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகள் குறித்த வரைபடம் தயாரித்தல் மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதி மக்களுக்கு பயிற்சி திட்டம் தயாரித்தல் போன்ற பணிகள் சுற்றுச் சூழல்துறையினரால் ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இயக்குநர்,அண்ணா பல்கலைக்கழகம் இந்திய தொலை உணர்வு (IRS) தொழில் நுட்ப பிரிவின் மூலம் கிராம அளவிலான ஒருங்கிணைக்கப்பட்ட கடற்கரை பகுதிகளின் மேலாண்மை திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.